பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர ராவுடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால், வரலட்சுமி சரத்குமார் பாஜகவில் இணையப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.
பாஜகவின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் பல்வேறு பிரமுகர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், நடிகை வரலட்சுமியை முரளிதர ராவ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பாஜகவின் ஆட்சி சாதனை குறித்த புத்தகம் ஒன்றை அவர் வழங்கினார்.
இதன் புகைப்படம், இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. இதற்கு, நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வரலட்சுமி கூறுகையில், “எனக்கு பாஜக உள்பட எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை. நான்கு ஆண்டு ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு முரளிதர ராவிடம் நன்றி தெரிவித்துள்ளேன்” என்றார்.