நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா, புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவில் 5ம் இடம் பெற்று அசத்தியுள்ளார்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் அதன் காரைக்கால் கிளையில் என மொத்தம் 200 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றிற்காக, ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு வைத்து மருத்துவ படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஜிப்மர் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் இருபிரிவாக நடைபெற்றது.
நாட்டில் உள்ள முக்கிய 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில், 1,54,491 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள், நேற்று மாலை ஜிப்மரின் www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவில், இந்திய அளவில் அன்கதல அனிருத பாபு முதலிடமும், அகில் தம்பி இரண்டாவது இடமும், ப்ரேராக் திரிபாதி மூன்றாவது இடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் 4வது இடமும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 12வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்த மாணவி கீர்த்தனா ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவில் 99.996 சதவீத மதிப்பெண் பெற்று 5ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது என்றும், வகுப்புகள் ஜூலை 4ம் தேதி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.