கோவை மாவட்டம் சூலூர் அருகே இயக்குநர் அமீரின் கார் மீது பாஜகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமீர், பாஜக குறித்து கருத்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சி தொண்டர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதோடு, அமீருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சமாதானத்தில் ஈடுபட்ட கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, அமீரை தனது காரில் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த இயக்குநர் அமீரின் காரில், கொங்கு இளைஞர் பேரவை பொறுப்பாளர் மாணிக்கம் கமலேஷ், சிவாஜிராஜ் உள்பட 4 பேர் திருப்பூர் புறப்பட்டனர்.
கார் சூலூர் முதலிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பாஜக-வினர் அமீரின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகின்றது. வாகனத்தில் இருந்து இறங்கிய 4 பேரில் அமீர் இல்லாததைக் கண்டு தாக்குதல் நடத்தியவர்கள் அதிர்சியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்தம்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், விசாரணை நடத்தி வருகிறார். கார் மாறி பயணம் செய்ததால் இயக்குநர் அமீர் காயமின்றி உயிர் தப்பினார்.