தமிழகத்தில் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் மற்றும் விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 11ம் வகுப்புக்கும் கடந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் நடைபெறும் தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “ 2018-2019ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைகிறது.
11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவு பெறும். மேலும், வரும் கல்வியாண்டு முதல் ஆங்கிலம், தமிழ் பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்ற கொள்கை மாற்றி அமைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடைபெறம். இதனால், பொதுத் தேர்வு முடிவுகள் வழக்கத்தைவிட 10 நாள்கள் முன்னதாகவே வெளியிடப்படும்.
மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். அதற்கான வகுப்புகள் ஜூலை மாதம் முதலே தொடங்கப்படும் ” என்றார்.