இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் இருக்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வாஜ்பாய் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 11:30 மணி அளவில் வாஜ்பாய் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் விஐபி சிசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 93 வயதாகும் வாஜ்பாய்க்கு முதலில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று தகவல் பரவியது.
இதை மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அவரது வழக்கமான சோதனைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு வேண்டிய சிகிச்சைகளை ஏய்ம்ஸின் மருத்துவக் குழு கவனமாக பார்த்து வருகிறது' என்று விளக்கம் அளித்தது.
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாஜ்பாயை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்தனர். இதையடுத்து பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'முன்னாள் பிரதமர் வாஜ்பாயை டெல்லி ஏய்ம்ஸில் சந்தித்தார் பிரதமர் மோடி.
அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் வாஜ்பாயின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர். மேலும், வாஜ்பாய் அவர்களின் குடும்பத்துடனும் பேசினார்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.