ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை உலக முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாக கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள்.
ஓரளவு வசதி படைத்த நடுத்தர மக்கள் கூட பெருநாள் சிறப்பு தொழுகைக்கு செல்வதற்கு முன்பு, தர்மம் கட்டாயம் தர வேண்டும் என்பதே நோக்கம்.
இத்தகைய ஈகை திருநாள் உலக முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
தலைநகர் டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர், மகாராஷ்ரா மாநிலத்தின் மும்பை மாநகர், தமிழகத்தில், சென்னை, கோவை, நாகை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு நமாஸ் செய்தனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இனிப்பு, பலகாரங்கள் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.