18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் இரு வேறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், 'வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு இடைத் தேர்தலை சந்திக்கத் தயார்' என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து, 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. எனவே அவரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். இதைக் காரணம் காட்டி தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், 18 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி இரு வேறு தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கு தற்போது மூன்றாம் நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகுதி நீக்க வழக்கை திரும்ப பெறப் போவதாக அறிவித்துள்ளார் தங்க தமிழ்செல்வன். 'எங்கள் மீது எந்தத் தவறும் இல்லையென்ற போதும் நாங்கள் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டது. எனது தொகுதியான ஆன்டிப்பட்டியில் ஏகப்பட்ட மக்கள் பிரச்னை இருக்கிறது. எனவே, மீண்டும் இடைத் தேர்தலைச் சந்தித்து எனது சட்டமன்றக் கடமையை ஆற்றத் தயாராக இருக்கிறேன்' என்று அறிவித்துள்ளார்.