தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு அங்குலம் ஆக்கிரமிப்பை கூட அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி மகாதேவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தபடி, காணொளி காட்சி மூலம் விசாரித்தார்.
அப்போது இந்துசமய அறநிலையத்துறை துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குத்தகை பாக்கி 25 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு அங்குலம் ஆக்கிரமிப்பை கூட அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், கோவில் நிலங்களை சட்டப்பூர்வமாக குத்தகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து சந்தை மதிப்பில், தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.