மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தியது மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழு.
குறிப்பாக, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இது அதிமுக அரசின் சாதனை’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரை, தோப்பூரில் சீக்கிரமே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மதுரையில் உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இங்கு, அதிநவீன வசதியுடன் 750 படுக்கை அறைகள் அமைக்கப்படும். மேலும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்கள் ஒதுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட மத்திய அரசுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்’ என்று கருத்து கூறியுள்ளார்.