ஊழல் குறித்து விசாரணை நடத்தினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், " திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்கான அங்கீகாரத்தை கருணாநிதி அளித்துள்ளார்" என்றார்.
"ஜெயலலிதா இறந்ததால் முதல்வரான எடப்பாடி. என்னை பார்த்து என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார். தற்போதுள்ள சூழலில் ஒப்பந்தம் விடுவதில் கமிஷன், சாலைபோடுவதில் ஊழல் என ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு, ரூ.10 கோடி வரை செல்கிறது" என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து விசாரணை நடத்தப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள். இந்த ஆட்சியை மாமூல் கொடுத்து தக்க வைத்துள்ளனர். மக்கள் நம்மை நம்புகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவை ஆளும் கட்சியாக மக்கள் பார்க்கின்றனர்" என்று ஸ்டாலின்பேசினார்.