அரசு பெண் ஊழியர்களுக்கு, இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகள் பிரசவ கால விடுமுறை கடந்த 2016-ம் ஆண்டு 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக, அதாவது 9 மாதங்களாக தமிழக அரசு உயர்த்தியது.
ஆனாலும், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால் 2-வது பிரசவத்துக்கு அரசு விடுமுறை வழங்கப்படவில்லை. இதுபற்றி பல பெண் ஊழியர்கள் நீதிமன்றத்துக்கு சென்று முறையிட்டனர்.
நீதிமன்றமும் 2-வது பிரசவத்துக்கு அரசு 270 நாட்கள் விடுமுறை வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், ‘முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றவர்கள், 2-வது பிரசவத்துக்கும் அரசு விடுமுறையான 270 நாள் எடுத்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.