காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவுடன் எந்த பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நீண்ட நாட்களாக முகாமிட்டுள்ள திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். கட்சி வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர், "தாம் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் இன்றி சுமூகமாக செல்கிறது.யாரும் தனி அணி இல்லை. ராகுல் தலைமையில் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம்.குஷ்புவுடன் எந்த பிரச்சினையும் இல்லை." என்றார்.
"தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரம்பு மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் தி.மு.க தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால், முதலமைச்சர், அமைச்சர்கள் என்ன வேலை செய்வார்கள்" என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
"மத்திய அரசின் நலத்திட்டங்கள், நிதி ஆகியவற்றை பெற்று தருவதற்கு ஆளுநர் பாலமாக செயல்பட வேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது. ஆளுநர் தனது ஆய்வை குறைத்து கொள்ள வேண்டும்" என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.