18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: நீதிபதி மாற்றம்!

by Rahini A, Jun 27, 2018, 19:34 PM IST

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்தான வழக்கில் 3-வது நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர்.

அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர். முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சபாநாயகர் தனபால்.

இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 2 பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி விமலா, மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால், அவருக்கு எதிராக குற்றம் சுமத்திய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் 17 பேர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதில், ‘உச்ச நீதிமன்றம் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரினர். இதையடுத்து உச்ச நீதிமன்றம், ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப் படாது. மாறாக, நீதிபதி சத்யநாரயணன் வழக்கை விசாரிப்பார்’ என்று உத்தரவிட்டுள்ளது.

You'r reading 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: நீதிபதி மாற்றம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை