ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

Dec 15, 2017, 16:58 PM IST

சென்னை: இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதில், அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேச்சைகள் என 58 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரம் ஆடல், பாடலுடன் களைகட்டி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய தொகுதி என்பதால், கட்சிகள் இங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் தொடங்கிய இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அதன் பிறகு, போலீஸ் கமிஷனர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறிய 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர். விதிமுறை மீறி செயல்பட்டதாக அதிமுக பிரமுகர் ஆவடி குமாரின் கார் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 துணை ராணுவ கம்பெனி படையினர் கேட்டிருந்தோம். அவர்களில் 11 பேர் வந்துள்ளனர். மீதி 4 பேர் இன்னும் ஓரிரு நாளில் வந்து சேர்வார்கள். தேர்தல் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீஸ் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
மேலும், ” வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி காலை முதல் தொடங்கியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சின்னம் பொருத்தும் பணி முடிந்துவிடும்” என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறினார்.

You'r reading ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை