மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இதய துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்போலோ மருத்துவர் சினேகா ஸ்ரீ கூறியதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் சினேகா ஸ்ரீ ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், “2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி போயஸ்கார்டனில், மயக்க நிலையில் ஜெயலலிதா நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தார் . அங்கு முதலுதவி சிகிச்சை எதுவும் ஜெயலலிதாவுக்கு வழங்கவில்லை." என்றும்
“பின்பு, ஸ்டெர்ச்சர் உதவியுடன் ஜெயலலிதா ஆம்புலன்சில் ஏற்றி, அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆம்புலன்சில் சசிகலா மற்றும் மருத்துவர் சிவக்குமார் உடனிருந்தனர்.”
“அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு, அங்கு இதய துடிப்பை சீராக்கும் பேஸ் மேக்கர் கருவி ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டது.”
“ஆகையால் அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு என்ற தகவல் தவறானது” என மருத்துவர் சினேகா ஸ்ரீ வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்கெனவே அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே, ‘தான் எங்கு இருக்கிறேன்’ என ஜெயலலிதா கேட்டதாக சசிகலா வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், ஜெயலலிதா மயக்க நிலையில்தான் இருந்தார் என மருத்துவர் சினேகா ஸ்ரீ கூறியிருப்பதால், இதில் உள்ள முரண்பாடு குறித்து விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.