முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அதற்கான அரசாணையை அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 48(ஏ) பிரிவின் கீழ் மக்களையும், சுற்றுசூழலையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் கேரி பாக் எனப்படும் (கவர்) பொருட்கள் மிகுந்த ஆபத்தானவை என்பதால் அதற்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
அதில், பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கிளாஸ், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக்கால் தயாரான கொடிகள் என அனைத்து வகையான பொருட்களையும் தடைசெய்யப்படும். அதே நேரம் இவ்வாரான பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுநீர் கால்வாய்களில் சென்று அடைத்துக்கொண்டு பெரிய சிரமங்களை ஏற்படுத்துகின்றன இதனை கருத்தில் கொண்டும் தடைவிதிக்கப்படுகிறது.
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது பொருந்தாது. அவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி மக்கும் தன்மை அல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு கொண்டு சென்றாலோ, மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.