நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் திலீப். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகர் சங்க தலைவராக பதவி ஏற்றதும் மீண்டும் நடிகர் சங்கத்தில் திலீப் சேர்ந்தார்.
இதன் எதிரொலியாக நடிகர் சங்க உறுப்பினர் சங்கத்தில் இருந்து 4 முக்கிய நடிகைகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஒரு குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பு அளிக்க கூடாது என்றும் மேலும் 14 முக்கிய நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி கேரளா மகளிர் ஆணையமும் திலீப் மீண்டும் சேர்ந்ததை விமர்சித்து இருந்தது. இதற்கு மோகன்லால், இது நடிகர் சங்க பொதுக்குழுவில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்ட விஷயம் என்று பதில் விளக்கம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கம் இரண்டாக பிரியும் நிலைமை வந்துள்ளது. திலீப் மீண்டும் உறுப்பினராக இணைய எதிர்ப்பு தெரிவித்தோர் அனைவரும் இணைந்து புதிய சங்கம் ஒன்றை நடிகரும் இயக்குனருமான ஆஷி அபு மற்றும் ராஜிவ் ரவி தலைமையில் துவங்க முடிவு செய்துள்ளனர். அதற்கு திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள், புதிதாக துவங்க உள்ள நடிகர் சங்கத்தில் இணைய உள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மலையாள நடிகர் சங்கத்தின் நடவடிக்கைக்கு உள்ளான பல நடிகர் நடிகைகளும் இந்த புதிய சங்கத்தில் இணைய உள்ளனர்.
விரைவில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை, நடிகர், நடிகைகள் சந்தித்து விளக்கம் அளித்து, விரைவில் ஒரு நல்ல முடிவினை தெரிவிப்போம் என ஒரு முக்கிய நடிகர் பேட்டியளித்துள்ளார்.