2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு தமிழக அரசே காரணமா என இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கனமழை பெய்தது. இதில், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த பேரிடரை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறக்க முடியாது என்றே கூறலாம்.
இதுதொடர்பான புள்ளி விவரங்கள் குறித்து இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், குளங்கள், ஏரிகள், ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு சென்னையில் பெரு வெள்ளத்தை உருவாக்கியதற்கு பெரும்பங்கு வகிக்கிறது. சென்னை வழியே ஓடும் 3 ஆறுகள், பல ஓடைகள், மாநகரின் குறுக்கு நெடுக்காக ஓடுகின்றன.
ஆனால், சேற்றுப்படிவு திட்டமிடப்படாத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ளநீரை கொண்டு செல்லும் பாதை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைதவிர, செம்பரப்பாக்கம் மேல்மடையில் 2 புதிய நீர்தேக்கங்களை அரசு அமைக்காததும் வெள்ளப்பெருக்குக்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 1975ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் 5000 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாக இருந்துள்ளது. ஆனால், 2017ம் ஆண்டில் இதன் பரப்பளவு 695 ஹெக்டராக சுருங்கி உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.