தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கே போனார்? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்?” எனக் கேள்விகள் எழுப்பினார்.
மேலும், ‘ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். 99 நாட்கள் நடந்த போராட்டம் தொடர்பான உளவுப் பிரிவு போலீஸ் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.