உடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமையன்று இரவு வருகை தந்தார்.
கடந்த ஓர் ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக பொது இடங்களுக்கு வருவதையும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று [15-12-17] வெள்ளிக்கிழமை அன்று இரவு தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 8.55 மணியளவில் அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
அறிவாலயத்தில் அவரிடம் அளிக்கப்பட்ட காகிதத்தில் தனது கையெழுத்தை இட்டார் கருணாநிதி. மாற்றிக் கொடுத்த பேனாவை அவர் சரிசெய்திவிட்டு தெளிவாகவும், உறுதியாகவும் கையெழுத்து இட்டதாகவும், அதனை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் துரைமுருகன் கூறினார்.
பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, முதன் முதலாக அண்ணா அறிவாலயம் வந்த செய்தி அறிந்த முக்கிய நிர்வாகிகள் கூடி விட்டனர். இதனால் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.