புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வான ராகுல் காந்தி, இன்று பதவியை ஏற்றுக் கொண்டார். இவருக்கு, தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். 132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பணிகளை சோனியா செய்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கட்சிப் பணிகளில் இருந்து விலகி ஓய்வு எடுத்துக் வந்தார்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால், இதில் ராகுல் காந்தி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு எதிராக போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், ராகுலை முன்மொழிந்து பலர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த 11ம் தேதி போட்டியின்றி ஏகமனதாக ராகுல் காந்தி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து, சனிக்கிழமையான இன்று ராகுல்காந்தி முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ராகுல் தலைவராக பெற்றுப் ஏற்பதை நேரில் காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
தொண்டர்கள் அங்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக காணப்பட்டதால், காங்கரஸ் தலைமை அலுவலகம் இன்று விழா கோலத்தில் மிதந்தது.
இந்நிலையில், காலை 11 மணிக்கு சோனியா காந்தியிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் காந்தி பெற்றார். தொடர்ந்து, ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர், ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.
இதன்பின்னர், ராகுலை வாழ்த்தி சோனியா காந்தி பேசிக் கொண்டிருந்தபோது பட்டாசு ஒன்று பயங்கரமாக வெடித்தது. இதனால் சோனியா காந்தி பேச்சில் இடையூறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சோனியா காந்தி பட்டாசு வெடிப்பதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று மைக்கில் கூறினார். இருப்பினும் தொடர்ந்து, பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் கோபமடைந்த சோனியா, என் குரல் இருக்கும் நிலையில் என்னால் கத்திப் பேச முடியாது. தயவு செய்து பட்டாசு வெடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறினார்.
அப்போது, சோனியா காந்தியை ராகுல் காந்தி சமாதானப்படுத்திய பிறகு, அமைதியாக காத்திருந்த சோனியா வெடி சத்தம் நின்ற பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்.