கைது செய்யப்பட்ட ஆறுமுகம்: போலி சான்றிதழ் மூலம் பயிற்சியாளரான கதை

Jul 13, 2018, 18:56 PM IST

கோவையில் நேற்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவும் சில பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதிக்க லோகேஸ்வரி என்ற மாணவியை அழைத்து சென்ற ஆறுமுகம் கீழே மற்ற மாணவர்கள் பிடித்திருக்கும் வலையில் குதிக்க சொல்லியுள்ளார். ஆனால் லோகேஸ்வரி பயத்தில் அமர்ந்து கொண்டு யோசிக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் லோகேஸ்வரியை மேலிருந்து தள்ளினார் ஆறுமுகம்.

அதில் கழுத்து பகுதியில் பலத்த அடிபட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் லோகேஸ்வரி.

இந்நிலையில் பேரிடர் பயிற்சி கொடுத்த ஆறுமுகத்தை கைது செய்தனர் போலீசார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் என்ற சான்றிதழ் போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட எஸ்.பி ஆறுமுகம் கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் கால பயிற்சி அளித்து வந்துள்ளார்.

மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சான்றிதழ்கள் போலியானது என தெரியவந்துள்ளது. பேரிடர் மேலாண்மையில் பணி புரிவது போன்று போலியான சான்றிதழை காட்டி பயிற்சியளித்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் நெல்லையில் செய்தியாளரிடம் பேசிய பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ராஜேந்திர ரத்னா, "கல்வி நிலையங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வருவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்கீகரிக்கப்படாத பயிற்சியாளர் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆறுமுகத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் என்ற சான்றிதழ் குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் ராஜேந்திர ரத்னா.

You'r reading கைது செய்யப்பட்ட ஆறுமுகம்: போலி சான்றிதழ் மூலம் பயிற்சியாளரான கதை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை