அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்புக்கு காவலர்களை பணி அமர்த்துவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளியை கவனிக்காத மருத்துவரை, உறவினர்கள் தாக்கியதாக கூறி, 2017 மார்ச் 16-ஆம் தேதி பயிற்சி மருத்துவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த குமரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 20 கிலோ மீட்டரில் ஒரு மருத்துவமனை அமைக்க கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு வழக்குகள் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தாலுகா அளவில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு போலீசாரை பணி அமர்த்துவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்.