முதலமைச்சர் மேற்பார்வையில் பட்டப்பகலில் வாக்களர்களுக்கு ரூ.6000 சப்ளை - ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

by Lenin, Dec 17, 2017, 19:39 PM IST

ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

MK Stalin

மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்து, ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பிலும், ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து இன்னொரு அணியாக போட்டியிடும் வேட்பாளரின் சார்பிலும் என்னென்ன அக்கிரமங்கள், அநியாயங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி, இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திரு. விக்ரம் பத்ரா அவர்களை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்து, 11 புகார்களை கொடுத்திருந்தோம். ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பணம் ஆளும் கட்சியின் சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்தும் புகார் அளித்துள்ளோம்.

குறிப்பாக, ரூ.2 கோடி வைத்திருந்த ஒரு அதிமுகவை சேர்ந்த நபரை பிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தால், அவரிடம் இருந்தது சில ஆயிரங்கள் மட்டும் தான் என்று காவல்துறை சார்பில் செய்தி வெளியாகிறது. இதையெல்லாம் காவல்துறை உயரதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், அவர்கள் கண்டும், காணாமலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அராஜகங்களை எல்லாம் மீறி, நேற்றைய தினம் மட்டும் ரூ.20 கோடி வைத்திருந்த அதிமுகவினரை, திமுக தோழர்கள் பிடித்து ஒப்படைத்தாலும், அவர்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.

நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேற்பார்வையில் தான் இது நடந்துள்ளது.

எங்கெல்லாம் பண விநியோகம் நடைபெற்ற இடங்களில் எங்களுடைய கழக தோழர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்கள். அந்த வீடியோக்களையும் ஒரு பென் ட்ரைவில் ஆதாரமாக இணைத்து புகார் மனு அளித்துள்ளோம். அதையெல்லாம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading முதலமைச்சர் மேற்பார்வையில் பட்டப்பகலில் வாக்களர்களுக்கு ரூ.6000 சப்ளை - ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை