8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு இன்று சேலம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.
இத குறித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னை கைது செய்து சிறைபடுத்துவதன் மூலமாக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகின்றனர். நாங்கள் மக்களை சந்திக்கத்தான் போகிறோம்.
அரசே கருத்து கேட்கிறது. மாவட்ட கலெக்டரிடம் மக்கள் வரிசை வரிசையாக நின்று கருத்து சொல்கிறார்கள். நாங்களும் அதுபோல பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்கள் தான் கேட்கிறோம்.
முதலமைச்சர் 90 சதவீத மக்கள் எங்களுக்கு விரும்பி நிலத்தை தந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். 90 சதவீத மக்கள் நிலத்தை தந்து விட்ட பிறகு, நாங்கள் மக்களை சந்திக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்.
மக்களை நாங்கள் சந்திக்கும்போது அவர்களுடைய குறைகளை கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறார்கள். இது தான் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் வைத்து என்னை கைது செய்வதன் மூலம் மக்களுக்கு அச்சுறுத்தலை விடுகிறார்கள்.
மறைமுக மிரட்டலை விடுகிறார்கள். நேற்று சிறைபிடித்து இன்றைக்கு பிணையில் விடுகிறார்கள் என்றால் இது அவசியமற்ற ஒரு கைது. இந்த சிறைபிடிப்பு அவசியமற்றது என்று கருதியதால் தான் நீதிபதி விடுதலை செய்தார்கள். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே இவ்வளவு சாலைகள் இல்லை.
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க ஏற்கனவே 6 வழி கிருஷ்ணகிரியில் இருக்கிறது. 4 வழி சேலத்தில் இருக்கிறது. ரெயில் வண்டி பயணம், விமானம் பயணம் இருக்கிறது. எனவே சேலத்திற்கு ஏன் வேக பயணமாக 8 வழி சாலை போட வேண்டும் என சிந்திக்கிறார்கள். வேகமாக போய் நாங்க என்ன செய்ய போகிறோம்” என்றார் ஆவேசமாக.