சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை சித்ரவதை செய்யக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரேங்க் முறை கைவிடப்பட்ட நிலையிலும் கூட, தமிழகத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி நேரத்துக்கு முன்பாக காலை நேரத்திலும் வகுப்பு முடிந்த பிறகு மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
இதனால் மாணவ, மாணவிகள் 12 மணி நேரம் வரை பள்ளிகளிலேயே இருப்பதாகவும், எனவே அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை 12 மணி நேரம் அமர வைத்து சித்ரவதை செய்யக் கூடாது எனவும், நீண்ட நேரம் மாணவர்களை அமர வைப்பதால், பல்வேறு உடல் உபாதைகள், சிறுநீரக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி நேரத்திலேயே பாடங்களை எடுத்து முடித்து விட வேண்டும். கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டாம். மதிப்பெண் குறைவாக எடுக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.