மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணையாமல் சிதறினால், 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், “குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையை தந்துள்ளன.
மதசார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒருங்கிணைய வேண்டிய தேவையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு இந்த முடிவுகள் சவாலாக அமைந்துள்ளன.
ஆகவே இந்திய அளவில் மதசார்பற்ற கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை இப்போதிருந்தே திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு அதிருப்தி இருந்தாலும், மீண்டும் மீண்டும் பா.ஜனதா வெற்றி பெறுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2019 பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணையாமல் சிதறினால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. இதுதான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி. எனவே ஜனநாயக சக்திகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.