ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேரறிவாளனின் விடுதலை கோரும் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் போது சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் கொல்லப்பட்டார். தனு என்ற தற்கொலைப்படையைச் சேர்ந்தவர் செயல்படுத்திய குண்டு வெடிப்பு மூலம் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 2 ஆம் தேதி தமிழக அரசு முடிவெடுத்தது.
அப்போது, விடுதலை செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது மாநில அரசு. ஆனால், ‘குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் அகிவிடும்’ என்று கூறி விடுதலைக்கு சம்மதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், பேரறிவாளன் தனக்கு விடுதலை கோரும் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. மத்திய தகவல் ஆணையத்தின் முன் நாளை பேரறிவாளன் விசாரிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.