நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு ஐந்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்திற்கு அருகில் அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் 13 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டுகிறது.
இது குறித்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அடையாறு ஆற்றங்கரையில் கட்டப்படும் கட்டடத்திற்கு எந்த திசையிலும் செல்ல முடியாத வகையில் உள்ளது என்பது வரைபடத்தின் மூலம் தெரிகிறது என நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
"இப்படி வழியே இல்லாமல் கட்டடம் கட்டுவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. வழியே இல்லாமல் கட்டப்படும் கட்டடத்திற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" என தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"அடையாறு நதிக்கும், இந்த கட்டடத்திற்கும் இடையில் சுவர் கட்டப்பட்டுள்ள போதும், விதிகளின்படி உரிய இடைவெளி விடப்படவில்லை. வெள்ள அபாய பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த கட்டடம் கட்டப்படுகிறது" என்றனர் நீதிபதிகள்.
இந்த இடத்தை ஆய்வு செய்து, கட்டடத்திற்கும் நதிக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி உள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த அறக்கட்டளைக்கு கடந்த ஐந்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி எவ்வளவு எனவும், அந்த நிதியை செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தள்ளிவைத்தனர்.