சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு நீண்ட ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. இந்த புதிய சொத்து வரி மூலம் 1160 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் தமிழக அரசு எதிர்பார்த்தது.ஆனால், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் தழுவிய போராட்டத்தில் தி.மு.கவினர் ஈடுபட்டனர். சென்னையில், மாநகராட்சி துணை ஆணையர் அலுவலகம் முன்பு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலும், நுங்கம்பாக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.கவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தி.மு.கவினர் போராட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசின் மானிய உதவி தொகைகளைப் பெற்று, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல், வாடகைதாரர்கள், வணிக பெருமக்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வகையில், சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.