சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததை தொடர்ந்து, கடந்த 28-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட சிறிய பின்னடைவுக்கு பின்னர், கருணாநிதியின் உடல்நலம் சீரடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். சிகிச்சை அளிக்கப்படும் அறைக்கு சென்று கருணாநிதியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர் பார்த்தனர்.
பின்னர், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோரை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் சந்தித்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியளார்களிடம் பேசிய முதலமைச்சர் “திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பெரியவர் கருணாநிதியை நேரடியாகப் பார்த்தேன் அவர் உடல்நிலை சீராக உள்ளது” என்று கூறினார்.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி இரண்டு நாட்களுக்கு முன்பே சில கோவிலில் பூஜை நடந்தது. இன்றையதினம், காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்களுள் சிலர் மொட்டை அடித்து கருணாநிதி நலம்பெற வேண்டிக்கொண்டனர்.