ஆர்.கே.நகரில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

Dec 19, 2017, 12:04 PM IST

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற இருக்கும் இந்த தேர்தலுக்கான பிரசாரங்கள் போட்டியிடும் கட்சிகள் சார்பில் அனல் பறக்க இருந்தன. இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
21ம் தேதி காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி வரை நடைபெறும்.

தேர்தல் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 21ம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதனால், 19ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பிரசார கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசைநிகழ்ச்சி அல்லரது திரையரங்கச் செயல்பாடு அல்லது எந்தவித பிறகேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது. இந்த விதி முறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 19ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவற்கு எந்தவொகு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது, 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியமுறை கேடான செயலாகும்.

மேலும், 19ம் தேதி மாலை 5 மணி முதல் 21ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

You'r reading ஆர்.கே.நகரில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை