விவசாயி தற்கொலை... பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுக - ராமதாஸ்

பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுக - ராமதாஸ்

Jul 30, 2018, 21:04 PM IST

நிலம் பறிக்கப்படுவதை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Green way road

இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக நிலம், வீடு, கிணறு உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் பறிக்கப்படுவது உறுதியானதை அறிந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான நிலமும், குடியிருப்பதற்கான வீடும் கையகப்படுத்தப்பட்டால், வாழ வழியில்லாமல் போவதுடன், குடியிருக்க வீடும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வர நேரிடுமே? என்று அஞ்சிய சேகர், அதிகாரிகளை சந்தித்து தமது நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க எந்த அதிகாரியும் முன்வராததால் கவலையடைந்த விவசாயி சேகர் பயிர்களுக்கு தெளிப்பதற்கான பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி சேகரின் தற்கொலைக்கும், அவரது குடும்பத்தினர் எந்த ஆதரவும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்திருப்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே பலமுறை கூறியதைப் போல சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைப்பதால் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடையுமே தவிர, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் ஏற்படாது.

Ramadoss

ஆனாலும், யாரோ பிறப்பித்த கட்டளைகளுக்கு பணிந்து, அப்பாவி ஏழை விவசாயிகளின் நிலங்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி பறிக்க முயன்றது தான் சேகரின் தற்கொலைக்கு காரணமாகும். சென்னை- சேலம் இடையிலான பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தால் சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகளுக்கு சேகரின் தற்கொலை சிறிய உதாரணம் தான். பசுமைச் சாலைத் திட்டத்திற்காக 7500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.

அதுமட்டுமின்றி, இதே அளவு நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஒட்டுமொத்தமாக 15,000 ஏக்கர் நிலங்களை சுமார் 10 ஆயிரம் உழவர்கள் இழப்பார்கள். அவர்கள் அனைவருக்குமே வேளாண் தொழில் மட்டும் தான் ஒரே வாழ்வாதாரம் ஆகும். அவர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்கள் கையகப்படுத்தப் பட்டால், அவர்கள் அனைவருமே விவசாயி சேகரைப் போலவே தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள்.

பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களாக கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். ஏதேனும் அதிசயம் நடக்கும்; அதன் மூலம் தங்களின் நிலங்கள் காப்பாற்றப்படும் என்று அந்த விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மாறாக அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுப்பதற்கான ஆபத்துகள் உள்ளன.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படாது என்பதும், அவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அது மிகக்குறுகிய காலத்தில் கரைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி விடும் என்பதும் உழவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

poison

வேளாண் தொழிலை அழித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த வளர்ச்சித் திட்டமும் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகுக்காது. விவசாயம் தான் பாதுகாக்கப்பட வேண்டிய தொழில் ஆகும். விவசாயிகள் தான் காப்பாற்றப்பட வேண்டிய உயிரினம் ஆகும். இவற்றைக் கருத்தில் கொண்டு, சேலம் - சென்னை பசுமைச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாறாக, அதிக நிலம் கையகப்படுத்த தேவையில்லாத வகையில் வாணியம்பாடி - சேலம் இரு வழிச் சாலையை விரிவுபடுத்தி, பெங்களூர்- சென்னை சாலையுடன் இணைக்கும் மாற்றுத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். நிலம் பறிபோகவுள்ள அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகரின் குடும்பத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading விவசாயி தற்கொலை... பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுக - ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை