தமிழகம் போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த ஜான் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
“விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி மற்றும் உள்ளூர் காவல்துறை பொதுமக்களை துன்புறுத்துவதை தடுக்க வேண்டும். 242 வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். துப்பாக்கி சூடிற்கு காரணமாக அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்பன போன்ற அடுக்கடுக்கான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இது ஒரு புறம் இருக்க, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலையான பிறகு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சத்யபாமா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது சட்ட விரோதமான என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “தமிழகம் ஜனநாயக நாடா அல்லது போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டனர்.