கன்னியாகுமரி: ஒக்கி புயலால் சேதமடைந்த கேரளா, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் வருகை தந்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரபிக்கடலில் உருவான ஒக்கி புயலால், கேரளா கடலோர பகுதி, தமிழகத்தின் குமரி மாவட்ட கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலின் கோர தாண்டவத்தால், பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் சந்திக்க பிரதமர் மோடி இன்று வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
அதன்படி, நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூர் வந்த மோடி, இன்று காலை விமானம் மூலம் லட்சத்தீவுகள் சென்றடைந்தார். அகத்தி நகரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர், புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.
இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வந்த மோடியை, அம்மாநில கவர்னர் மற்றும் முதல்வர் வரவேற்றனர்.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் இன்று மதியம் கன்னியாகுமரி வந்தார் மோடி. இவரை, தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
அப்போது, பிரதமரிடம் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் விளக்கினர். மேலும், தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர், கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை கிராமங்களான தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, நீரோடி உள்பட 8 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அங்குள்ள ஆலய பங்கு தந்தையர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்டறிந்தார்.
இதன்பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரத்திற்கு சென்ற மோடி, அங்கு முதல்வர், அதிகாரிகளை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.