மதுரை ஆதீனம் எனக் குறிப்பிட்டு மனு செய்த நித்யானந்தாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெகதலபிரதாபன் என்பவர் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், ‘நித்யானந்தா சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். நித்யானந்தா நியமனத்தை ரத்துசெய்யக்கோரிய வழக்கில் ஆதீனமாக நியமனம் செய்வதற்குத் தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், ஆதீன மடத்துக்குள் செல்வது தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடையும், போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை, மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன்னை 293வது ஆதினம் என நித்யானந்தா குறிப்பிட்டிருந்தார். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனுவை திரும்ப பெறாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஆதின மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உத்தரவிட்டார்.