பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வழக்கப்படி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது விஞ்ஞானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவில் இந்தியாவுக்கு பெருமைத்தேடி தந்த சந்திரயான் மற்றும் மங்கள்யான் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை பல குவித்த மயில்சாமி அண்ணாதுரையின் திறமையை தொடர்ந்து பயன்படுத்த தவறியது விண்வெளி அறிவியல் துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில், "மயில்சாமி அண்ணாதுரை, சிறந்த விண்வெளி விஞ்ஞானிகளில் ஒருவர். இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-2இ, இன்சாட்-3பி, ஜிசாட்-1, இன்சாட்-3இ, எஜுசாட், இந்திய தொலை உணர்வு(ஐஆர்எஸ்), சிறு, அறிவியல், மாணவர்(எஸ்எஸ்எஸ்)செயற்கைக்கோள் களை வடிவமைத்து, விண்ணில் செலுத்தும் திட்ட இயக்குநர் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்".
இந்தியாவின் தலைசிறந்த செயற்கைக்கோளாக கருதப்படும் சந்திரயான்-1-ஐ 2008-ஆம் ஆண்டில் உலகமே வியக்கும் வண்ணம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருந்தார். சந்திரயான் திட்டம் இந்திய விண்வெளி ஆய்வின் மணிமகுடமாக விளங்கியது.
இத்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்தியதற்காக மயில்சாமி அண்ணாதுரைக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்திருந்தன.
இதேபோல, செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகவும் சீரியமுறையில் பங்காற்றியிருந்தார். சூரியன் பற்றி ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்படவுள்ள ஆதித்யா திட்டப்பணியிலும் மயில்சாமி அண்ணாதுரை ஈடுபட்டிருந்தார். உலக அரங்கில் இந்தியவிண்வெளி ஆய்வுக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற்றுதந்தவர் என்று பல நாடுகள் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளன.
இவரது தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும்போது மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மயில்சாமி அண்ணாதுரை பணி ஓய்வுபெற்றிருப்பது இந்தியவிண்வெளிஆய்வுப்பணி நிரப்பமுடியாத இழப்பாகும். இனிமேலும் காலந்தாழ்த்தாது, மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென்பதே அறிவியல் உலகின் வேண்டுகோளாகும்.