கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 4 பேர் நியமனம்

by Rajkumar, Aug 4, 2018, 12:24 PM IST
சென்னையில் கூட்டுறவு சங்கங்களுக்கு நடந்த தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்தது.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாகவும், பிற கட்சியினர் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களை அவர்கள் பெறுவது இல்லை என்றும் சென்னை ஐகோர்ட்டிலும், ஐகோர்ட்டின் மதுரை கிளையிலும் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டின் மதுரை கிளை, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலுக்கு தடை விதித்தது. பின்னர், இந்த வழக்குகள் எல்லாம் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. மேலும், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இதன்படி, இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தார்கள்.
 
பின்னர் நீதிபதிகள் நேற்று மாலையில் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-  கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 4 பேரை நியமிக்கின்றோம். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரிக்கின்றோம்.
 
ஒவ்வொரு விசாரணை குழுவிலும், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைவராகவும், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
 
சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை கொண்ட வடக்கு மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான குழுவும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்ட மேற்கு மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தும்.
 
மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களை கொண்ட தெற்கு மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையிலான குழுவும், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை கொண்ட மத்திய கிழக்கு மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ராஜசூரியா தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தும்.
 
இந்த 4 நீதிபதிகள் தலைமையிலான விசாரணை குழுக்களையும் அமைத்து 2 வாரங்களுக்குள் தமிழக அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த குழுக்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தவர்கள் ஆகியோரது புகார்களை மட்டுமே விசாரிக்க வேண்டும்.
 
இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஒரு வாரத்துக்குள் தங்கள் எதிர்ப்பு மனுவை கொடுக்க வேண்டும். இந்த புகார்கள் குறித்து இந்த நீதிபதிகள் குழுக்கள் விசாரணை நடத்தி, முறைகேடு இருந்தால், நடந்த தேர்தலை ரத்து செய்தும், முறைகேடுகள் நடைபெறவில்லை என்றால், தேர்தல் முடிவுகளை வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
 
வழக்கு தொடராதவர்கள், புகார்களை ஏற்கனவே தெரிவிக்காதவர்களின் புகார்களை விசாரிக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

You'r reading கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 4 பேர் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை