கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு மு.க.ஸ்டாலினின் நன்றி அறிக்கை

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு திமுக செயல் தலைவரும் அவரின் மகனுமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Karunanidhi

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும், நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம்.

தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர்.

Karunanidhi Death

அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும், பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்த பொதுமக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை ஊடகத்துறையினர் என அனைவருக்கும் திமுகவின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார்.

அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அதிமுக அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

Karunanidhi

அண்ணாவுக்கு கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதிபதிகளே வழங்கி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய திமுக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வில் அழுத்தந்திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த திமுக சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோபலட்சம் திமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த கருணாநிதியை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

Karunanidhi

வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக சோதனையான காலகட்டத்தில் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஈடு செய்ய முடியாத பேரிழப்பான கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.“ இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds