அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் ஒரு நபர் குழுவின் காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையகோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழக சட்டசபையில், கடந்த ஜனவரி மாதம் உரையாற்றிய, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ‘கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்’ என அறிவித்தார்.
அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த குழு, ஏற்கனவே பல சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்தது. தற்போதும் விசாரணை நடந்து வருகிறது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31-ஆம் தேதிக்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி சித்திக் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் என அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்த்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் சித்திக் கமிஷனின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இக்குழு, ஓரிரு மாதங்களில் அறிக்கையை, தமிழக அரசிடம் தாக்கல் செய்த பின், உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.