இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் தொடர்பான உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. வகுத்த பாட புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த கோரி வழக்கறிஞர் புருேஷாத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், முதல் வகுப்பு குழந்தைகளுக்கு கூட வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாகவும் குறை கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த சுற்றறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சி பள்ளிகள் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சிக்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிகல்வித் துறை செயலாளர்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை அன்றைய தினத்திற்கே தள்ளிவைத்தார்.