கைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9 ஆயிரம் பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய ஹீரோ நிறுவனம், மேலும், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து கவுரவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அனுப்பிரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் படும் இன்னல்களை சிறுமி அனுப்பிரியா டிவியில் பார்த்து தெரிந்துக் கொண்டுள்ளார். இதன்பிறகு, தான் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த பணத்தை கேரளாவிற்கு நிவாரண நிதியாக வழங்க முன்வந்து, தனது உண்டியல்களை உடைத்தார். அதில் இருந்த ரூ.9 ஆயிரம் சேமிப்பு பணத்தை, கேரளாவிற்கு நிவாரண நிதியாக வழங்கினார்.
சிறுமியின் இந்த செயல் அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரின் பாராட்டு மழையில் நினைந்து வருகிறார் அனுப்பிரியா.
இந்நிலையில், அனுப்பிரியாவின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவிக்கும் வகையில், ஹீரோ நிறுவனம் அவருக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளது.
இதைதவிர, ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு சைக்கிள் வழங்கப்படும் என்றும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அனுப்பிரியா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.