இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

Aug 21, 2018, 12:43 PM IST

உலகம் முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நாளை இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பக்ரீத் வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் ஆகும்.

இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

இந்த இனிய நாளில், தியாகத்தின் சிறப்பினை மனதிலே நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அறவழியைப் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை