மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் எதிரொலியால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: வட தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால், வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பெய்து வரும் மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
இதைதவிர, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வரும் 26ம் தேதி கனமழை பெய்யும், கடல் சீற்றமும் அதிகம் காணப்படும். இவ்வாறு மையம் கூறியது.