சாதி, மத அமைப்பை சார்ந்தவர்களுக்கு இடமில்லை என ரஜினி மக்கள் மன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்திற்கான விதிமுறை புத்தகத்தை ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட சில விதிகள், ரஜினி மக்கள் மன்ற கொடியை உறுப்பினர்கள் நிரந்தரமாக பயன்படுத்தக் கூடாது கூட்டங்கள், மாநாடுகள் முடிந்த பிறகு கட்சி கொடி வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். மன்றக் கொடி நிச்சயமாக துணியால் மட்டுமே தயாரிக்க வேண்டும்-பிளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமென்றாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகலாம். 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இளைஞரணியில் இருக்க வேண்டும். மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது. சாதி, மதம் சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராகச் சேர அனுமதியில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வழங்கப்படும். முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.
தலைமையகத்தின் எழுத்துப் பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.
சமூக வலைதளங்களில் சொந்தக் கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. உள்பட பல விதிமுறைகள் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆன்மிக அரசியல் பாதையை தேர்வு செய்துள்ள ரஜினி காந்த், தனது கட்சியின் பெயரையோ, கொள்கையையோ, மற்ற விபரங்களையோ தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.