துணை வேந்தர் தேர்வுகுழு உறுப்பினர் விவகாரம்.. நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பல்கலைக்கழக சட்டவிதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான ஜூன் 16ஆம் தேதி பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கு சிண்டிகேட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான தங்கமுத்து நியமிக்கப்பட்டதாக கூறி, அவரது நியமனத்துக்கு தடை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணைவேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.