ஸ்டெர்லைட் ஆய்வு குழு தலைவர் நியமனம்

Aug 31, 2018, 21:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. 
 
இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். 
 
இதனை தொடர்ந்து, புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயம் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவராக நியமிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. 
 
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க ஸ்டெர்லைட் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து புதிய நீதிபதியை நியமித்து உடனே உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்பபாயம் பிறப்பித்துள்ளது. இவர் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
 
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

You'r reading ஸ்டெர்லைட் ஆய்வு குழு தலைவர் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை