தமிழக உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை பெய்து வந்த நிலையில் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சென்னை, கரூர், நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இதனால், அதிகபட்சம் பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், திருச்சி மற்றும் வேலூரில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
இருப்பினும் வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கர்நாடகாவில் இருந்து குமரிக்கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.