முட்டை கொள்முதல் ஒப்பந்தம்... உயர் நீதிமன்றம் ஆணை

சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court

2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை விதித்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய நிபந்தனைகளால் தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்தத்துக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்க கோரி கரூரை சேர்ந்த 4 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, "குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. ஆரோக்கியமான போட்டிக்காவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது" என அரசு தரப்பு தெரிவித்தது. மேலும், இடைதரகர்களை தவிர்ப்பதற்காகவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதையடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.