ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் செப்டம்பர் 7ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
அப்போலோ தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா, ஆட்சிப்பணி அதிகாரி ஆகியோர் செப்டம்பர் 10ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணை ஆணைத்திற்கு அப்போலோ நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க கோடி கணக்கில் பணம் பெற்ற போதும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்போலோ மருத்துவர்கள் ஆஜராக வேண்டிய தேதியில் வரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.